கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்
ஒரு ஜாதகருக்கு கெடுதல் செய்யும் பாவங்கள் எல்லாம் கெட்டுவிட்டால் அதன் மூலம் ஜாதகர் ராஜயோகத்தை அனுபவிப்பார் என்பதே இதன் பொருள் .
ஜாதகர் தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவிதமான நன்மைகளையும் முழுமையாக அனுபவிக்க வேண்டுமெனில் லக்னம் பலமாக இருக்கவேண்டும் . அதே நேரத்தில் அவர் அந்த நன்மைகளை எளிதில் அடைவாரா அல்லது போராடி பெறுவாரா என்பதை ஆறாம் பாவம் எட்டாம் பாவம் மற்றும் பனிரெண்டாம் பாவங்களே தீர்மானிக்கின்றன .
ஜாதகரை நாம் ஹீரோ என எடுத்துக்கொள்வோம் . இந்த ஹீரோ பலம்கொண்டவராக இருந்தாலும் அவர் நன்மை பெறுவதை தடுக்கும் வில்லன்கள்தான் ஆறு , எட்டு , பனிரெண்டாம் பாவங்கள் . இந்த வில்லன்களுடைய பலம் அதிகமாக இருந்தால் ஹீரோவுடைய வெற்றி போராட்டம் நிறைந்ததாக இருக்கும் . வில்லன்களுடைய பலம் குறைய குறைய ஹீரோவுடைய வெற்றி எளிதாக இருக்கும் .
நம்முடைய ஆயுதத்தை நாம் தீர்மானிப்பதில்லை நம்முடைய எதிரிகள்தான் என்பார்கள் . அது உண்மைதான் ஆனால் அந்த எதிரியை தீர்மானிப்பதே கிரகங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூத்திரதாரியான இயற்கைதான் . அந்த இயற்கை எனும் டைரக்டர் வில்லன்களுக்கு கொடுத்திருக்கும் ஆயுதம் பலம் குன்றி இருக்கும் பட்சத்தில் ஹீரோ அவர்களை திரைப்படத்தில் வருவதுபோல எளிதாக பந்தாடிவிட்டு வெளிநாட்டில் சென்று நாலு டூயட் பாடலும் பாடி சுபம் என படத்தை முடித்துவிடலாம் . வில்லன்களின் ஆயுதம் பலமாக இருக்கும் பட்சத்தில் ஹீரோவுக்கு கடைசிவரை போராடவே நேரம் சரியாக இருக்கும் . வெளிநாடு சென்றாலும் டூயட் பாட முடியாது அங்கேயும் வில்லனுடன் சண்டையிடவே ஹீரோ செல்லவேண்டியிருக்கும் .