ஜோதிடரின் மனநிலை
சிலரை " ஏம்பா உன் வாயில நல்ல வார்த்தையே வராதா?" என்பார்கள்.இது சில ஜோதிடருக்கும் பொருந்தும்.
ஒரு குடும்பத்தலைவர் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு ஏதோ பிரச்சனை வருகிறது. அதைத் தீர்க்கும் பொறுப்பு இந்த குடும்பத் தலைவருக்கு இருக்கிறது. அவர் முதலில் இந்தப் பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று நிதானமாக யோசிக்கவேண்டுமா? அல்லது பிரச்சினைக்கு பயந்து மற்றவர்களிடம் கோபம் கொள்ள வேண்டுமா?
பெரும்பாலான ஜாதகத்தில் நல்லது, கெட்டது இரண்டுமே இருக்கும். எல்லாவற்றையும் ஆராய்ந்துதான் பலன் சொல்லவேண்டுமே தவிர ஜாதகத்தின் ஒரு பகுதிமட்டும் நம் கண்ணில் தெரியக்கூடாது.
சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் கெட்டது மட்டுமே கண்ணில் படும். அதுவரை பரவாயில்லை. ஆனால் அந்த கெட்டதை ஓவர்டேக் செய்யும் பல நல்ல அமைப்புகள் அந்த ஜாதகத்தில் இருக்கும். இவர்கள் கெட்டதை பார்த்துவிட்டதால் அடுத்த கட்டமே போகமாட்டார்கள். நல்லது அவர்கள் கண்ணில் தெரியவே தெரியாது. அவர்கள் விரும்புவதும் அதைத்தானே ! கெட்ட விஷயங்களை சொல்லி அது பலித்தால் எளிதில் புகழ் பெறலாம். ஏனெனில் நல்ல விஷயங்களை சொல்லி மனநிறைவோடு வாழ்வதைவிட கெட்டதை சொல்லி எளிதில் புகழ் பெறுவதே சிலரின் நோக்கமாக இருக்கிறது . நல்ல விஷயங்களின் தாக்கத்தைவிட கெட்டவிஷயங்களின் தாக்கம் உடனே மக்களை சென்றடைந்துவிடும் என்பதை சிலர் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் .
அவர்கள் வேண்டுமென்று செய்யாதவராய் இருக்கலாம். மாறாக கெட்டதைப் பார்ப்பது அவர் குணமாகக் கூட இருக்கலாம். ஆனால், அத்தகைய மனிதரிடம் பாரபட்சமற்ற (unbiased) பலனை எப்படி எதிர்பார்க்க முடியும்?
குறையை பார்க்கக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் குறையை மட்டுமே பார்க்கும் பழக்கம் இருப்பது ஒரு மனநல குறைபாடே. அவர்கள் தங்கள் ஜாதகத்தைப் பார்த்தாலும் அதில் என்ன குறை என்றுதான் பார்ப்பார்கள். ஒருவருடைய தசா புத்தி சரியில்லாத காலத்தில் அவர்கள் இந்தமாதிரி ஜோதிடர்களிடம் மாட்டிக் கொள்வார்கள்.